ராமநாதபுரம்: ஓடும் ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில் அரசுக் கல்லூரி பேராசிரியர் கைதாகி உள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் தனது பெற்றோருடன் ஓசூருக்குச் செல்ல ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதே ரயிலில் பயணம் செய்த சையத் இப்ராஹிம் என்ற 57 வயது ஆடவர், இரவு நேரத்தில் அந்தப் பெண்ணுக்குப் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் உதவி கேட்டு கூச்சலிடவே, மற்ற பயணிகளும் அவரது பெற்றோரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து சையத் இப்ராஹிமை பிடித்து ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இளம் பெண் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவானது. விசாரணையில், இவர், சையத் இப்ராஹிம் சேலம் அரசுக் கலை கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்தது. அரசுப் பணியாளர் என்பதால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

