சிறையில் சிக்கிய ஆறு கைப்பேசிகள்
சேலம்: மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இருந்து ஆறு கைப்பேசிக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணைக் கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் ஆறு கைப்பேசிகள் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக இரண்டு கைதிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாடத் திட்டத்தில் கருணாநிதி வரலாறு
சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிப் பாடத் திட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வரலாறு சேர்க்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, காலஞ்சென்ற கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாற்றைப் பாடத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்
சென்னை: பயிற்சி மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல், போராட்டம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில நேற்று பதற்றமான சூழல் நிலவியது. மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பயிற்சி மருத்துவர் மீதான தாக்குதல் தொடர்பில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
திருமண நாளன்று மூன்று சிறுவர்களை மீட்டு உயிரிழந்த இளையர்
மதுரை: கண்மாயில் மூழ்கிய மூன்று சிறுவர்களைக் காப்பாற்றிய பின்னர் இளையர் ஒருவர் தனது திருமண நாளன்று பலியானது மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மாட்டுத்தாவணி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் கருப்பாயூரணி பகுதியில் கண்மாயில் குளித்த மூன்று சிறுவர்கள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியது அவருக்குக் கேட்டுள்ளது. கண்காயின் ஆழமான பகுதியில் குளித்த சிறுவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு குரல் எழுப்பினர். இதையடுத்து தனது வாகனத்தை நிறுத்திய முத்துக்குமார், கண்மாயில் இறங்கி மூன்று சிறுவர்களையும் காப்பாற்றினார். எனினும் துரதிர்ஷ்டவசமாக கண்மாய் சேற்றில் சிக்கிக்கொண்டதை அடுத்து கரை திரும்ப முடியாமல் அவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் அவரது திருமண நாளாகும் என்று அவரது உறவினர்கள் சோகத்துடன் குறிப்பிட்டனர்.

