தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 7,000 டன் நெல் மூட்டைகள் காணாமல் போன விவகாரம் குறித்து உண்மைகளை முழுமையாக ஆராயாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டு இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் வெற்றிலைக்காரன்பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக சென்னையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கு புகார் போனதை அடுத்து, இந்தப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கடந்த இரு நாள்களாக ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெல் மூட்டைகள் மாயமான செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து நெல் மூட்டைகளை மீட்கவேண்டும் எனவும் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், "சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒருகாலத்தில் கணக்கு காட்டியவர்கள் 7,000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?" என வினவியுள்ளார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் சக்கரபாணி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வரும் முதல்வரின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பழனிசாமி வசைபாடி உள்ளதாகச் சாடியுள்ளார்.
இவ்விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான செய்தி வதந்தியாகும். நெல் மூட்டைகள் மாயமான சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளில் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என மாவட்ட ஆட்சியர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

