செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

செம்மொழிப் பூங்காவில் ஜூன் 3 முதல் 5 வரை மலர்க்கண்காட்சி

சென்னை: சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் ஜூன் 3 முதல் 5ஆம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என தோட்டக் கலைத்துறை அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செம்மொழிப் பூங்காவில் 2வது ஆண்டாக 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. கண்காட்சியைக் காண மாணவர்கள், சிறுவர்களுக்கு 20 ரூபாயும் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி

நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள ஐந்து கோழிப்பண்ணைகளில் இருந்து இலங்கைக்குத் தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால் கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இத்தகவலை இலங்கை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேசன் (எஸ்.டி.சி.) தலைவர் அசின் வலிசுந்தரா தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், இலங்கையில் உள்ள பெரிய பேக்கரிகள், பிஸ்கட் உற்பத்தியாளர்கள், சமையல் குத்தகையாளர்கள், உணவகங்களுக்கு ஒரு முட்டை விலை ரூ.35க்கு (இலங்கை எஸ்எல்ஆர்) விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கெஜ்ரிவால் சந்திப்பு

சென்னை: சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசவுள்ளார். மத்திய அரசின் அவசரச் சட்டம் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, அதை நிராகரிப்பதற்காக ஆதரவு கோருகிறார். இந்தச் சந்திப்பின் போது அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து கெஜ்ரிவால் ஏற்கெனவே ஆதரவு கோரியிருந்தார்.