சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், மேகதாது அணை திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி என்றும் இவ்வளவு கொள்ளளவு உள்ள அணைகள் இருக்கும்போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

