செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

சீமான் டுவிட்டர் கணக்கு முடக்கம்

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள் ளன. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக இந்திய அரசிடம் இருந்து அதிகாரபூர்வ கடிதங்களைப் பெற்றதன் அடிப்படையில் இக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலை யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டர் பதிவில், "கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. டுவிட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.

கணினிப் பாகங்களில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

சென்னை: கணினிப் பாகங்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.63 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட் டுள்ளார். தங்கக் கடத்தல் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் விமான நிலையத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதாக சுங்கத்துறை தெரிவித்தது. சுமார் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

காவல்துறை அதிகாரி என்று பொய் சொல்லி வசூல் செய்தவர் கைது

திண்டுக்கல்: காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள கடைகளில் வசூல் நடத்திய ஆடவர் கைதானார். மதுரையைச் சேர்ந்த 36 வயதான சரவணன், கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை விற்றதாக மிரட்டல் விடுத்து வசூல் நடத்தியது குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு அவர் வசூலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.