கடலில் வீசப்பட்ட 32 கிலோ தங்கம் மீட்பு: மூவர் கைது

கடலில் வீசப்பட்ட 32 கிலோ தங்கம் மீட்பு: மூவர் கைது

1 mins read

ராமேசுவரம்: அண்மையில் கடலில் வீசப்பட்ட 32 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேர் கைதாகி உள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இந்திய கடலோரக் காவல் படை உதவியுடன் அதிகாரிகள் குறிப்பிட்ட கடற்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கையில் இருந்து படகில் தங்கம் கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளைப் பார்த்ததும் நடுக்கடலில் தங்கக் கட்டிகளை வீசி எறிந்தனர்.

இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் அந்தத் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றின் சந்தை மதிப்பு ரூ.20 கோடி எனக் கூறப்படுகிறது.

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்துலக அளவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தங்கக் கட்டிகளை மீட்பதற்கு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இரண்டு நாள்களாக தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.