தஞ்சை: இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது தஞ்சாவூர் காவல்துறை.
நேற்று முன்தினம் தலைக்கவசம் அணிவது தொடர்பாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குறிப்பாக, பெண்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அந்த வகையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனங்கள் ஓட்டிவந்த பெண்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அச்சத்துடன் வாகனங்களை நிறுத்திய பெண்களுக்கு, தலைக்கவசம் அணிந்திருந்தால் வெள்ளி நாணயம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. தலைக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையின் அறிவுரை மட்டுமே மிஞ்சியது.