கரூர்: கடந்த சில நாள்களாக கரூர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் (படம்) தொடர்புடைய இடங்கள், அவரது ஆதரவாளர்களின் அலுவலகங்களில் நடைபெற்று வந்த வருமான வரிச் சோதனை நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தச் சோதனை நடவடிக்கை நீடித்தது. அச்சமயம் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
பல்வேறு மாவட்டங்களில், நாற்பதற்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. உணவகங்கள், கல்குவாரி, அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என வருமான வரித்துறையினர் சந்தேகப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியதாகத் தகவல் வெளியானது.
முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட வேளையில் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளால் அரசியல் களத்திலும் பரபரப்பு நிலவியது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான சச்சிதானந்தம், செங்கோட்டையன், பாஸ்கர் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் துணை யுடன் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, இரண்டு பெரிய பெட்டிகளில் அவை கொண்டு செல்லப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணினி உள்ளிட்ட பொருள்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்டத்தில் செல்வாக்கும் தொடர்புகளும் அதிகம் எனக் கருதப்படுவதால், அந்தப் பகுதியைக் குறிவைத்து வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சில இடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, தடை செய்யப்பட்ட இடம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
அமைச்சரின் நண்பர் ஒருவருக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் முக்கிய ஒப்பந்தப்பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அந்த நண்பர் கோடிக்கணக்கில் வருமானம் பெற்று வருவதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதையடுத்து, அமைச்சர் மூலம் பலனடைந்த ஆதரவாளர்கள் அனைவரும் வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வந்த வருமான வரித்துறையின் சோதனை நடவடிக்கை எட்டு நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருள்கள் குறித்த கூடுதல் தகவல்களை அத்துறையின் அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகரிக்கும் நெருக்கடி