சென்னை: தமிழகத்தில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதும் அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியும் அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பத்து மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, 2026 மற்றும் 2027ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்துவதில் இருந்தும் விலக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனஅன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை இப்போது செயல்படுத்த மின்சார வாரியம் துடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதை அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்தால், அது சரிசெய்ய முடியாத பெருந்தவறாக அமைந்துவிடும் என எச்சரித்துள்ளார்.
"தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் பத்து ஆண்டுகளுக்கு முன் உயர்த்தப்படவில்லை; 10 மாதங்களுக்கு முன்பு தான் உயர்த்தப்பட்டது.
"மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொதுமக்களால் இன்னும் மீண்டுவர முடியவில்லை.
"பல குடும்பங்களில், மின்கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க பால் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தியாகம் செய்ய வேண்டியுள்ளது," என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லி மாளாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் அனைவரும் மீள முடியாத பொருளியல் நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள் என அன்புமணி ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

