சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை அமர்த்தல் கூடாது என்றும் நிலையான ஆசிரியர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இடைக்கால ஆசிரியர்களை அமர்த்துவது கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி, சமூக நீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது எனச் சாடியுள்ள அவர், நிலையான ஆசிரியர்களை அமர்த்தும்போது, இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்படும் என்றும் இடைக்கால ஆசிரியர்கள் பணியமர்த்தலில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைளில் சமூக நீதி மறுக்கப்படுகிறது என்றும் ஆசிரியர்களை இடைக்காலமாக அமர்த்தி அவர்களின் உரிமைகளைப் பறிப்பதை ஏற்க முடியாது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"அதேபோல், நிலையான ஆசிரியராக அமர்த்தப்படும் ஒருவருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஆனால், இடைக்கால ஆசிரியர்களாக அமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் ஊதியம் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைவிட குறைவாகும்," என்றும் திரு.ராமதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

