நான்கு மாதங்களில் 50,000 இந்தியப் பயணிகள் இலங்கை செல்வர் என எதிர்பார்ப்பு
சென்னை: இந்தியா, இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்று தொடங்கியது.
இந்தச் சேவையை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் சென்னையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இலங்கையின் ஹம்பந்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை ஆகிய மூன்று துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் இக்கப்பல் இயக்கப்படுகிறது.
மத்திய அரசின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதே திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துக்குக் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கப்பல் பயணத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இந்தியாவில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துச் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க சென்னை துறைமுக ஆணையமும் தமிழக அரசின் சுற்றுலாத் துறையும் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றார் அமைச்சர்.
இந்தியா, இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பலில் மூவாயிரம் பேர் பயணம் செய்ய இயலும். இந்த சொகுசுக் கப்பலில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.
நீச்சல் குளம், மதுக்கூடம், உணவகம், விளையாட்டு அரங்கம், திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பயணிகள் அனுபவிக்கலாம்.
அடுத்த நான்கு மாதங்களில் இந்தக் கப்பலில் இந்தியாவில் இருந்து மட்டும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பயணிகள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வர் எனக் கப்பலை இயக்கும் தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூர்கன் பெய்லோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலின் மூலம் மூன்று முதல் ஐந்து நாள்களை உள்ளடக்கிய சுற்றுலாப் பயணத் திட்டத்தின் கீழ் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.