கடலூர்: பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி உயிரிழந்ததை அடுத்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
ராமநத்தம் அருகே உள்ள வாகையூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 43 வயதான இவர் கடந்த மே 22ஆம் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
தன்னை விட்டுவிடுமாறு அச்சிறுமி கெஞ்சியபோதும் செந்தில்குமார் மனமிரங்கவில்லை.
இதனால் மனமுடைந்துபோன சிறுமி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். இதைக் கவனித்த அப்பகுதி பொதுமக்கள், சிறுமிமயை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுமியை சீரழித்த செந்தில்குமாரை கடலூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கொந்தளித்துப்போன வாகையூர் பகுதி மக்கள் செந்தில்குமாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இருநூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பதற்றம் நிலவியது. சிறுமியின் உடலைச் சுமந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து நடந்த போராட்டத்தால் ராமநத்தம், விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு விரைந்து சென்ற திட்டக்குடி வட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

