சென்னை: தர்மபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் மலர்விழியின் சென்னை வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேபோல் தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
கடந்த 2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29ஆம் தேதி வரை தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவியில் இருந்தார் மலர்விழி ஐஏஎஸ்.
மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அரசு அலுவலகங்களுக்கு ரசீது புத்தகங்கள் வாங்க மலர்விழி உத்தரவிட்டதாகவும் அதில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்துள்ளது என்றும் புகார் எழுந்தது.
அதன் பேரில் ஐஏஎஸ் அதிகாரியான மலர்விழி உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு பிரிவுகளின்கீழ் ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும், கொரோனா காலக்கட்டத்தில் அரசு அலுவலகங்களுக்காக கிருமி நாசினி கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதிலும் மலர்விழிக்கு தொடர்புள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார் மலர்விழி.
இந்நிலையில் சென்னையில் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மலர்விழியின் வீட்டில் காவல்துறை நேற்று காலை சோதனை மேற்கொண்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டிலும் சோதனை
இதற்கிடையே, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் கிருஷ்ணன் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த 2019ம் ஆண்டு காலகட்டதில் இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது, ஒன்றிய ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளின் தேவைக்காக பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

