நிலம் கையகப்படுத்த கடும் எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டையை அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக, அங்கு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட் டத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். விளைநிலங் களைக் கையகப்படுத்த மாட்டோம் என அரசாங்கம் எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் குடும்பத்தாரும் பங்கேற்றுள்ளனர்.
மதுப்புட்டிகளில் சிறுமியின் படம்: விஜயகாந்த் அறிவுறுத்து
சென்னை: தமிழகத்தில் விற்கப்படும் மதுப்புட்டிகளில், அண்மையில் உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். வேலூரைச் சேர்ந்த சிறுமி தன் தந்தை மதுப்பழக்கத்தை நிறுத்தாததால் விரக்தி அடைந்து உயிரை மாய்த்துக்கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுப்புட்டிகளில் ஒட்டப்படும் சிறுமியின் புகைப்படத்தைப் பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார். இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்குள் ஐநூறு மதுக்கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
ராமதாஸ்: பத்து நிமிட சூறைக்காற்றால் விவசாயிகளுக்கு ரூ.25 கோடி இழப்பு
சென்னை: சூறைக்காற்றில் சிக்கி 25 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை மரங்களை இழந்து கடலூர் விவசாயிகள் வேதனையில் மூழ்கி உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வாழைப்பயிர் சேதம் அடைந்துள்ளதால் தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பத்து நிமிடங்களுக்கு வீசிய திடீர் சூறைக்காற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் அங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கணவர் நினைவாக அரசுப் பள்ளிக்கு கட்டடம் கட்டிக்கொடுத்த மனைவி
கோவை: தனது கணவரின் நினைவாக மணிமண்டபம் கட்டாமல், அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டிக்கொடுத் துள்ளார் கோவையைச் சேர்ந்த மணிமுத்து. கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இவரது கணவர், சில ஆண்டு களுக்கு முன் காலமானார். அதன் பிறகு அந்நிறுவனத்தை நடத்தி வரும் மணிமுத்துக்கு, கோவை பட்டணம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் போதுமான கட்டட வசதி இன்றி மாண வர்கள் சிரமப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, தனது சொந்த செலவில் அப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிக்கொடுக்க நினைத்தவர், பின்னர் ஒரு கட்டடத்தையே கட்டித்தந்துள்ளார். தற்போது அங்கு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கூவம், அடையாறு கரையோரங்களில்
150 கண்காணிப்புக் கருவிகள்
கோவை: கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க 150க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கருவிகள் நிறுவத் திட்டமிட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த ஆறுகள் ஆக்கிரமிப்புகளில் சிக்கி, குப்பை, கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுமிடமாக மாறியுள்ளன என்றும் ஆறுகளின் அகலமும் குறைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

