சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவரூரில் விரைவு ரயில் பாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரயில் என்ஜின் ஒன்று சென்றது.
அப்போது தண்டவாளத்தின் குறுக்கே ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டிருந்ததை ரயில் ஓட்டுநர் கண்டார். உடனடியாக கீழே இறங்கி பரிசோதித்த அவர், தண்டவாளத்தில் தென்னை மரத்துண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். பின்னர், அந்த தென்னை மரத்துண்டை ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து ரயில்வே காவல்துறை விசாரித்து வருகிறது.
ரயிலைக் கவிழ்க்க சதி நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
200க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய ஒடிசா ரயில் விபத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள் சென்னையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

