'நாடாளுமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது; ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்'
சென்னை: திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் அஞ்சுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் (படம்) தெரிவித்துள்ளார்.
ஒருசிலர் திராவிடக் கொள்கைகள் குறித்து கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்கிறது திராவிட இயக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய 'அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
அதையடுத்து பேசிய முதல்வர், இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
"திராவிட மாடலின் வளர்ச்சிதான் தமிழகத்தை வளரச் செய்யும். இந்த தன்னம்பிக்கையை என்னுள் வளர்த்தவர் கருணாநிதி. நான் அவரது கொள்கை வாரிசு.
"கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த நன்மையைச் சொல்லத்தான் இந்த நூற்றாண்டு விழா நடைபெறுகிறது," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது என்றார்.
"யார் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அமைய வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேறுபாடு மறந்து இந்தியாவைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி அமைய கூட்டணி அமைத்தது போல், தேசிய அளவில் அமைய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதைத்தான் அகில இந்திய தலைவர்களிடம் தாம் தொடர்ந்து கூறி வருவதாகக் குறிப்பிட்டார். மதவாத சக்தியை வீழ்த்த தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றும் தேவையற்ற முரண்களுக்கு இடம் தரக்கூடாது என்றும் முதல்வர் கூறினார்.
"பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியுடன் புறப்பட்டுள்ளோம். மக்கள் நம்முடன் இருக்கின்றனர். நம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நம் உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம்.
"நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்லாமல் நாட்டுக்காக நடைபெறுகிறது. இது ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடக்கும் தேர்தல். இதில் மகத்தான வெற்றி பெற சபதமேற்போம்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.