குமரி: திருமண விருந்து நிகழ்வின்போது மணமக்கள் வீட்டார் இடையே ஏற்பட்ட திடீர் அடிதடி காரணமாக மணமகளைத் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார் மணமகன்.
இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
விருந்தின்போது மணமகளின் உறவினர்கள் சிலர் மது அருந்தி, போதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அப்போது மணமகனின் உறவுக்காரப் பெண்மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு பின்னர் அது அடிதடியைத் தூண்டிவிட்டது. இரு தரப்பினரும் திருமண மண்டபத்தின் கண்ணாடி சன்னல்கள், இருக்கைகள், மேசைகளை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே, சுற்றி நடக்கும் ரகளையைக் கண்டு பயந்துபோன மணப்பெண் மயங்கிவிழ, மணமகன் பதறிப்போனார்.
மயங்கிய நிலையில் இருந்த வருங்கால மனைவியைத் தூக்கி, அவர் தன் தோளில் சுமந்து, வேகமாக மண்டபத்தை விட்டு வெளியேறினார். மணமகள் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த மோதலின்போது ஆறு பெண்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.

