திண்டுக்கல்: நாசிக் வெங்காய வியாபாரம் செய்வதாக யூடியூப்பில் விளம்பரம் பதிவிட்டு ரூ.2.14 கோடி மோசடி செய்த காய்கறி வியாபாரி கைதானார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவைச் சேர்ந்தவர் சூர்யா, 35, என்ற அந்த விவசாயி, கடந்த 2021ஆம் ஆண்டில் யூடியூப்பில் புதிதாகக் கணக்குத் தொடங்கினார்.
மும்பை நாசிக் பகுதியில் இருந்து வெங்காயம் வாங்கி அதை நல்ல விலை வரும்போது விற்றுவருவதாகவும் இதில் முதலீடு செய்தால் பணம் 30% அதிகமாக திருப்பித் தரப்படும் என்றும் அவர் விளம்பரம் செய்தார்.
அதை நம்பி சென்னை, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேர் ரூ.2.14 கோடி பணத்தை சூர்யாவின் வங்கிக் கணக்கில் செலுத்தினர். சூர்யா தலைமறைவாகிவிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, தென்காசியில் பதுங்கி இருந்த சூர்யாவை கைது செய்தனர். சூர்யா மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இதனால் பணமோசடி மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.