சென்னை: மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையம் ஜூலை மாதம்தான் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
அங்கு கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் சோதனை ஓட்டங்கள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் இம்மாத இறுதிவரை சோதனை ஓட்டங்கள் நீடிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த புதிய விமான முனையமானது 136,295 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு, ஆண்டுதோறும் சுமார் 23 மில்லியன் பயணிகள் வந்து செல்கின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு புதிய முனையம் 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதிய முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில விமானங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் இயக்கப்படுகின்றன. தொடக்கத்தில் ஏர் பஸ் 320, 321, போயிங் 737, 738 ரக விமானங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டதை அடுத்து நடுத்தர விமானங்கள் இயக்கப்பட்டன. இவை குவைத், இலங்கை, எத்தியோப்பியா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இரவு நேர சோதனை ஓட்டங்களும் நடைபெற்றன.
எனினும் சோதனை ஓட்டங்கள் முடிவுக்கு வரவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களாக நடைபெற்ற சோதனை ஓட்டங்களின்போது சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய புதுக் கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று முதல் புதிய முனையத்தில் இருந்து 180 முதல் 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த விமானங்கள் இயக்கப்படும்.
இம்மாத இறுதிவரை இந்தச் சோதனை ஓட்டம் நீடிக்கும் என்றும் எந்தவிதமான புதுப் பிரச்சினைகளும் எழாவிட்டால் புதிய முனையம் ஜூலை மாதம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை மாதத்தில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

