சென்னை: ரயில் நிலைய பணிகளுக்காக 600 மரங்களை வெட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதை ஏற்க இயலாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்காக கட்டப்படும் புதிய கட்டடங்களின் வடிவமைப்பை சற்று மாற்றியமைப்பதன் மூலம் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கலாம் என அவர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
நவீனமயமாக்கம் என்ற பெயரில் விலைமதிப்பற்ற மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கெனவே இருநூறு மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.
"அந்த மரங்கள் அனைத்தும் 50 முதல் 80 ஆண்டுகளாக உள்ளன. பல மரங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்தவை. பாதுகாக்கப்பட வேண்டிய மரங்களை வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.
"சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ரூ. 734.91 கோடியில் நவீனமயமாக்கப்படுவதும் அதன் ஒரு கட்டமாக சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவதும் வரவேற்கத்தக்கது," என அன்புமணி தெரிவித்துள்ளார்.
வளர்ந்த நாடுகளில் எந்த மரமும் வெட்டி வீழ்த்தப்படுவதில்லை என்றும் மாற்று ஏற்பாடாக அவை வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடங்களில் நட்டு வளர்க்கப்படுவதாகவும் அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார்.
அதற்கான நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள ரயில்வே துறை உட்பட எந்த துறையும் நிறுவனமும் அதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த மறுப்பது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.