சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்தேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட அதன் அண்டை மாவட்டங்களும் தொழில் மையங்களாக உருவெடுத்து வருகின்றன.
எனவே தொழில் நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ், இம்மாவட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் விரிவான வளர்ச்சி காண முடியும் என அரசு கருதுகிறது.
இதற்காக கடந்த 1976ஆம் ஆண்டிலேயே 'முதல் முழுமைத் திட்டம்' (1976-96) தயாரிக்கப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தைச் செயல்படுத்த அப்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, போக்குவரத்து, உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தவும் நகர நெரிசலை குறைப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன.
'முதலாம் முழுமைத் திட்டம்' சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டதையடுத்து இரண்டாம் முழுமைத் திட்டம் (2006-26) தயாரானது. "அதன் மூலம் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஒழுங்குப்படுத்தப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டன. அவை வரையறுக்கப்பட்ட வளர்ச்சி மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
"மேலும், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் முழுமைத் திட்டத்திற்கான கால வரம்பு 2026ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
"இதையடுத்து 'மூன்றாம் முழுமைத் திட்டத்திற்'கான (2026-46) ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன," என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக வங்கியின் நிதி உதவியோடு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான சென்னை பெருநகர பகுதிக்கு மூன்றாம் முழுமைத் திட்டம் பற்றிய ஆய்வுகள் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
"தலைநகர் விரிவாக்கம் என்பது ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் வருவதால் சரியான சாலை இணைப்புகள், போக்குவரத்து வசதிகள் மூலமாக புதிய தொழில் நகரங்களை உருவாக்க முடியும். அந்த வகையில் வளர்ச்சி மிகுந்த இடங்களை தேர்வு செய்கிறோம்.
"சென்னையில் புதிதாக ஜவுளி நகரம், தொழிற்பேட்டைகள் அமக்கப்படும். விரிவாக்கம் மூலமாகத் தொழில் வளர்ச்சிக்கான அனைத்து விதமான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்," என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
முழுவீச்சில் செயல்படுத்தப்பட உள்ள 'மூன்றாம் முழுமைத் திட்டம்'

