செய்திக்கொத்து

2 mins read

சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்து: ஐந்து தொழிலாளர்கள் காயம்

கோவை: சமையல் செய்தபோது திடீரென சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய விபத்தில் ஐந்து வட மாநிலத் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. அனைவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து பேரும் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சசேர்ந்தவர்கள் என்றும் அன்னூர் பகுதியில் இயங்கி வரும் நிறுவனத்தில் ஐவரும் பணியாற்றி வருகின்றனர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கடப்பிதழ் தயாரித்து விற்ற கும்பலின் தலைவன் கைது

சென்னை: போலி கடப்பிதழ், விசா தயாரித்து விற்ற ஆடவரை சென்னை காவல்துறை கைது செய்தது. 54 வயதான முகமது ஷேக் இலியாஸ் என்ற அந்த ஆடவர் கடந்த மாதமே கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணையின்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 42 வயதான அகமது அலிகான் என்பவர்தான் போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பலின் தலைவன் என்பது தெரியவந்தது. அவர் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்களுக்கு போலிக் கடப்பிதழ்களை விற்றுள்ளார். இதையடுத்து தனிப்படையினர் ஹைதராபாத் சென்று அவரைக் கைது செய்தது.

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேற்று விசாரித்த இரு நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இதுவரை எடப்பாடி பழனிசாமி தரப்பின் வாதத்தை செவிமடுத்ததாகவும் அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தை முன்வைக்கும் என்றும் தெரிவித்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.

பொதுக் கலந்தாய்வை ஏற்க இயலாது: அமைச்சர் திட்டவட்டம்

சென்னை: மருத்துவப் படிப்புக்கான மத்திய அரசின் பொதுக் கலந்தாய்வு கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க இயலாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பொதுக் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியானதுமே மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது என்றார். "மாநிலங்களின் பங்களிப்பை குறைப்பது என்று பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு, பொதுக் கலந்தாய்வு ஏற்புடையதல்ல என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. மாநில உரிமைகளை மீறும் வகையிலான அறிவிப்புகள் ஏற்புடையதல்ல," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்தித் திணிப்பு: முதல்வர் எதிர்ப்பு

சென்னை: மத்திய அரசு இந்தியை திணிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சாடி உள்ளார். இந்தியைக் திணிக்கும் எந்த முயற்சியையும் திமுக அரசு எதிர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.