திருப்பூர்: சோமவாரப்பட்டி பகுதியில் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளின்போது முதுமக்கள் தாழியும் சில எலும்புகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து அங்கு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உடைந்த நிலையில் உள்ள முதுமக்கள் தாழி உள்ளிட்ட சில பொருள்கள் பெருங்கற்கால சின்னங்களாகக் கருதப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம், சோமவாரப்பட்டியில் வஞ்சிமுத்து என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடுகட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் கட்டுமானப் பணிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது சுமார் நான்கு அடி உயரமுள்ள முதுமக்கள் தாழியும் பற்களுடன் கூடிய தாடை உள்ளிட்ட சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து தொல்லியல் ஆர்வலர்கள் விரைந்து சென்று அவற்றைப் பார்வையிட்டனர்.
"இவை சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டவையாக இருக்க வாய்ப்புள்ளது.
"கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சேரர் முத்திரைகள், பிராமி எழுத்துகளுடன் கூடிய சில பொருள்கள் கிடைத்தன. எனவே விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்," என அவர்கள் தெரிவித்தனர்.

