சென்னை: தமிழர் ஒருவர் இந்தியப் பிரதமராக வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதமரானால் மிக்க மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராவதை திமுக தடுத்ததாக அமித்ஷா கூறியுள்ளார். அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
"எனினும் தமிழர் ஒருவர் பிரதமராவது தடுக்கப்பட்டதாக அவர் வெளிப்படையாகச் சொன்னால் உரிய விளக்கம் தரப்படும். மத்திய பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டு கால சாதனை குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு இதுவரை அமித்ஷா பதில் தரவில்லை," என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறிஉள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றால் அது பாஜகவால் மட்டுமே சாத்தியமாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் மாலை வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவரை பாஜகவால் மட்டுமே நாட்டின் பிரதமராக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
"கடந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து இரண்டு பேருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு இருந்தும் நடக்கவில்லை. பாஜகவை தமிழுக்கு எதிரான கட்சியாக திமுக திட்டமிட்டு கட்டமைக்கிறது.
"தமிழ் வளர்ச்சிக்கு பாஜக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது. குடிமைப்பணிகள் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுத ஏற்பாடு செய்தது," என்றார் அமைச்சர் அமித்ஷா.

