செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

மேட்டூர் அணை திறப்பு: மகிழ்ச்சி

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இம்மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை தண்ணீர் வந்து சேரும் என்பதால், குறுவை சாகுபடிக்கு உழவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அரசு குறுவைத் தொகுப்பு வழங்கும் என முதல்வர் அறிவித்ததால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நகராட்சி அலுவலகத்தில் கொலை; உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், 25, என்பவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றினார்.

அவர் நேற்று அலுவலக வளாகத்தில் இருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அதில் மோட்டார்சைக்கிளில் இருந்தவாறே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காவல்துறை புலன்விசாரணை தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொலையைக் கண்டித்தும் தப்பி ஓடிய கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரியும் ராஜேஷ் உறவினர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளேடால் பெண்ணை உடலில் 50 இடங்களில் வெட்டிய வாலிபர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக கிடந்ததை அடுத்து அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்தப் பெண்ணின் உடல் எங்கும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிளேடால் கிழிக்கப்பட்டு இருந்தது. அந்தப் பெண் அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரை வாலிபர் ஒருவர் இந்தக் கதிக்கு ஆளாக்கினார் என்பதும் தெரியவந்ததை அடுத்து வாலிபரைப் பிடிக்க காவல்துறை முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

நேர்மையான தம்பதிக்குப் பாராட்டு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 35, என்பவர் தன் மனைவி, குழந்தையுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது சாலையில் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.1.80 லட்சம் கிடந்ததைப் பார்த்து அதை அப்படியே எடுத்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் முருகனிடம் ஒப்படைத்தார். (படம்)

ஜெயபிரகாஷ் தம்பதியின் நேர்மையை அதிகாரிகள் பாராட்டினர். பணத்தை தக்க ஆதாரங்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என்று அதே இடத்தில் அதிகாரிகள் விளம்பரம் செய்தனர்.

இனிப்பு வழங்கி வரவேற்பு

சென்னை: தமிழக மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கோடை விடுமுறை முடிந்து மாணவ மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜூன் 12ஆம் தேதியன்று 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், ஜூன் 14ஆம் தேதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ரோஜாப்பூ, இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

குடிகார பேருந்து ஓட்டுநர் நீக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து காட்டுப்புதூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட அரசுப் பேருந்து திடீரென்று தாறுமாறாக ஓடியதால் பயணிகள் பயத்தில் அலறினர். ஓட்டுநர் பேருந்தை திடீரென்று நிறுத்தினார். ஓட்டுநர் போதையில் பேருந்தை ஓட்டியது தெரியவந்ததை அடுத்து அவர் தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.