சென்னை: தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையில் பிரச்சினை வலுத்துவரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தான் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளதாக நேற்று அண்ணாமலை தெரிவித்தார்.
"அவரைப் பற்றி நான் ஒரு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு இருக்கிறது," என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில் ஜெயலலிதாவின் பெயரைத் தான் ஓர் இடத்தில் கூட குறிப்பிடவில்லை என்றார் அவர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக அதிமுகவில் பெரியளவில் எதிர்ப்புக் குரல் கிளம்பி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அண்ணாமலை ஜெயலலிதாவைத் தான் மதிப்பதாக விளக்கம் அளித்து இருக்கிறார்.

