சென்னை: மீன்பிடி தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முடிந்ததால் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மீனவர்கள் உற்சாகத்துடன் படகுகளை இயக்கி கடலுக்குச் சென்றனர்.
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாண்டு இந்தத் தடைக் காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப் படகுகளைப் பழுது \பார்த்ததோடு, வலைகள் உள்ளிட்ட உபகரணங்களையும் சீரமைத்தனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், நள்ளிரவு முதல் தொழிலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை காசிமேட்டில், மீனவர்கள் தங்களது விசைப் படகிற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு கடலுக்குள் சென்றனர். நாகை மாவட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காகச் சென்றனர்.
நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடைக்காலம் முடிவு பெற்றதால் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவருக்குச் சொந்தமான படகில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
நாகையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் கடல்நீர் உட்புகுந்து படகு மூழ்கியது.
இதனால் படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். இதனைத் தொடர்ந்து மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சகமீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில் நாகை மாவட்டம் நாகராஜன் என்பவருக்குச் சொந்தமான படகும் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. படகில் சென்ற ரெத்தினம், குஞ்சாலு, சிவக்குமார் ஆகிய 3 பேரும் சகமீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.