அவதூறு வழக்கு: அண்ணாமலை நீதிமன்றம் வர உத்தரவு
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்துப்பட்டியல் என்ற பெயரில் திமுகவிலுள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். திமுக பொருளாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு குடும்பச் சொத்து ரூ.10,841 கோடி என்று அதில் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் டி.ஆர்.பாலு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "அண்ணாமலை வெளியிட்ட கருத்துகள் பொய். அவதூறு சட்டத்தின்கீழ் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏழைகளுக்குச் சிரமம்: ராமதாஸ்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு அரிசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக் கிறது. தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும்," என்று கூறியுள்ளார்.
சிபிஐ விசாரணை: அதிரடி ஆணை
சென்னை: சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும் அந்தந்த மாநில அரசின் முன்அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946 பிரிவு 6 வரையறுக்கிறது. 1989 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில், மேற்படிச் சட்டத்தின்கீழ் சிலவகை வழக்குகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று ஆணையிட்டுள்ளது.
அதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனிமேல் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும். இதுபோன்ற ஆணையை ஏற்கெனவே மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பிறப்பித்துள்ளன.
அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் தரப்பில் பதில் வாதம்
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற அமர்வில் நேற்று நடைபெற்றது. ஓபிஎஸ் தரப்பு இறுதி பதில் வாதங்களை முன்வைத்தது. எல்லாத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கு ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருப்பதால் அதிமுக வழக்கு தொடர்பாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தாத்தா, பாட்டி, பேத்தி மரணம்
மேல்மருவத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள காட்டுக்கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமது மனைவி ராணி மற்றும் பேத்தி அக்ஷயாவை (4) அழைத்துக்கொண்டு உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக புதன்கிழமை இருசக்கர வாகத்தில் ஆலப்பாக்கம் கிராமம் சென்று இரவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். மேல்மருவத்தூர் - வந்த வாசி சாலையில் செண்டிவாக்கம் அருகே வந்தபோது இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

