செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

ரூ.30,000 கோடி விவகாரம் தொடர்பில் புதிய புகார்

சென்னை: தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது ரூ.30,000 கோடி ஊழல் பற்றி பேசியதாக சமூக வலைதளங்களில் ஏப்ரல் மாதம் ஒலிப்பதிவு பரவியது.

அதன் தொடர்பில் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வுத்துறையிடம் புகார் செய்து விசாரணை தேவை என்றார்.

அவர், இப்போது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, காவல்துறை தலைமை இயக்குநரிடம் புதிய புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார். ஒலிப்பதிவு குரல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடையது அல்ல எனும் பட்சத்தில், அதுபோன்ற குரலைப் பதிவு செய்து குற்றம் சுமத்தியிருப்பது யார் என்பதைக் கண்டறிந்து, உரிய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

போலி பாஸ்போர்ட், விசா: முகவர்கள் இருவர் கைது

சென்னை: போலி பாஸ்போர்ட், விசா தயாரிக்கும் தொழில் செய்து வந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு முகவர்களைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த நிரோஷன் என்பவர் கடந்த 11ஆம் தேதி கைதானார். சபீக் அகமது, 32, நடராஜ், 65, என்ற இருவரும் பிறகு சிக்கினர். இந்த முகவர்கள் இரண்டு பேர் மீதும் ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் இவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொந்தகையில் 15 தாழிகள்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. (படம்)

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கின. நான்கு குழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானை ஓடுகள், சேதமடைந்த பானைகள், மரக்கரித் துகள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, கொந்தகையில் நடந்த அகழாய்வுப் பணியில், ஒரே இடத்தில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இரு அடியிலேயே தென்படத் தொடங்கிய நிலையில், முழுமையாக தோண்டிய பின்னர் முதுமக்கள் தாழிகள் திறக்கப்படும் எனத் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

'பிரமுகர்கள் வருகையின்போது மின்சாரம் தடைபடக்கூடாது'

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது அவர்கள் வந்து செல்லும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அதிகாரிகள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முக்கிய பிரமுகர்கள் வருகையின்போதும், பிரதான அரசு நிகழ்ச்சிகளின் போதும் அத்தகைய இடங்களை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் தமிழகம் வந்தபோது மின்தடை ஏற்பட்டதை அடுத்து இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கல்லணை திறப்பு

சேலம்: சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 522 கன அடியில் இருந்து 406 கன அடியாகக் குறைந்தது. அணை நீர்மட்டம் 101.58 அடியிலிருந்து 100.93 கன அடியாக குறைந்து, நீர் இருப்பு 66.05 டிஎம்சியாக உள்ளது.

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இது விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.