ஆளுநர்: அளித்த விளக்கம் சரியில்லை; முதல்வர்: உங்களுக்கு அதிகாரம் இல்லை
சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானதை அடுத்து அவர் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார்.
அவர் பார்த்து வந்த இலாகாக்களை வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து அரசமைப்புச் சட்டத்தின்படி அதற்கான அங்கீகாரத்தைப் பெற விரும்பி அதற்கான பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஆர்என் ரவியிடம் முதல்வர் அனுப்பினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ காரணங்களுக்காக மருத்துவமனையில் இருக்கிறார்.
அவர் சிகிச்சை பெற்றுவருவ தால் அவரின் இலாகாக்களை வேறு அமைச்சர்கள் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
குணமடையும்வரை செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்று தமிழக அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இலாகா மாற்றங்களுக்கான காரணங்கள் சரியில்லை; அவை தவறான பொருள் தருகின்றன என்று சொல்லி கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.
இதற்குப் பிறகு சில மணிகளிலேயே காரசாரமான பதில் கடிதத்தை ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுப்பினார்.
இலாகா மாற்றத்திற்கான காரணங்களைக் கேட்க ஆளுநருக்கு அதிகாரம் எதுவும் கிடையாது என்று பதில் கடிதத்தில் முதல்வர் தெரிவித்தார்.
புலன்விசாரணையை எதிர்நோக்குவதாலேயே அமைச்சர் ஒருவர் தன் பதவியைக் கைவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை முதல்வர் தன் கடிதத்தில் சுட்டினார். அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் நடக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோ இருவரும் வியாழக்கிழமை பின்நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் மே மாதம் 31ம் தேதி ஒரு கடிதம் எழுதியதாகவும் அடுத்த நாளே முதல்வர் ஆளுநருக்குப் பதில் கடிதம் எழுதியதாகவும் அவர்கள் கூறினர்.
ஆளுநரின் கடிதம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது.
இது குறித்து பரிந்துரைகளை அளிக்க ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும் இல்லை என்பது எல்லாம் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்ட தாகவும் அவர்கள் விளக்கினர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர்-ஆளுநர் இருவருக்கும் இடையில் இணக்கமான போக்கு இல்லை. இருவரும் நீயா-நானா அரசியல் நடத்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
இதில் இப்போது செந்தில் பாலாஜி விவகாரமும் சேர்ந்து கொண்டுள்ளது.