நாகர்கோவில்: நாகர்கோவில் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த பக்கத்து வீட்டு 14 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியுடன் குடும்பம் நடத்திய மூன்று பிள்ளைகளின் தந்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைதானார்.
இதுபற்றி காவல்துறை தரப்பில் செய்தியாளர்களிடம் பல விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
நாகர்கோவில் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார்.
பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப் பதிவானது.
சிறுமியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான ஆடவரும் தலைமறைவாகிப் போய் இருந்தது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
சிறுமியை அந்த நபர் கடத்தி சென்று இருக்கலாம் என்று நம்பிய அதிகாரிகள், அந்த ஆடவரைத் தேடத் தொடங்கினர். அவர் நாகப்பட்டினத்தில் இருப்பது கைப்பேசித் தொடர்பு மூலம் தெரியவந்தது.
உடனடியாக கன்னியாகுமரி மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் நாகப்பட்டினம் விரைந்தனர். அங்கு தேடியபோது வாடகை வீடு ஒன்றில் சிறுமியுடன் அந்த ஆடவர் குடும்பம் நடத்தியது தெரியவந்தது.
வாலிபர் கைதானார். சிறுமி மீட்கப்பட்டார். இருவரும் கன்னியாகுமரிக்குக் கொண்டு வரப்பட்டனர். அந்த ஆடவர் சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தது பிறகு நடந்த விசாரணையில் தெரியவந்தது.
அந்த ஆடவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த அதிகாரிகள், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

