சென்னை: தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சிஎம்சி போன்ற பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அவர்களில் பலரும் ஏழைகள்.
நோயாளிகளுடன் வரும் உறவினர்களும் நோயாளிகளும் குறைந்த கட்டணத்தில் தங்கு வதற்கு வாடகைக்கு அறை கிடைப்பதில்லை.
இந்தக் குறையைப் போக்கும் வகையில் வேலூர் சத்துவாச்சேரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதில் 250 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் விடுதி கட்டப்படும்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை இந்த அறிவிப்பை விடுத்தார்.
அந்த விடுதிக்கு 'கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி' என்று பெயரிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் தமிழக அரசு சார்பில் ரூ.376 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையைத் தாதியர்களுடன் சேர்ந்து திறந்துவைத்துப் பேசியபோது முதல்வர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
புதிய உயர் சிறப்பு மருத்துவ மனை 6.03 லட்சம் சதுரடியில், 1,000 படுக்கைகளுடன் கட்டப்பட்டு உள்ளன. பல்வேறு நவீன சிறப்பு வசதிகளைக் கொண்ட அந்தப் பல்நோக்கு மருத்துவமனை 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
ஆறு தளங்களைக் கொண்ட மருத்துவமனை வளாகத்தில் ஏ-புறநோயாளிகள் சிகிச்சைக் கட்டடம், பி-அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு, சி-எக்ஸ்ரே உள்நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவு என மூன்று தொகுதிகள் உள்ளன.