ஸ்டாலின்: நிதிநுட்ப நகரம் திட்டத்தின் மூலம் 80,000 பேருக்கு வேலை கிடைக்கும்
சென்னை: தமிழகத்தில் மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் திறன் வாய்ந்த, படித்த இளையர்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிநுட்ப சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏதுவாக தமிழகத்தில் புதிதாக நிதிநுட்ப நகரம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், இப்புதிய திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இப்புதிய நிதிநுட்ப நகரம் அமைகிறது என்றும் தெரிவித்தார்.
"தமிழகம் ஏராளமான உலக நிறுவனங்களை ஈர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்துலக நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
"சென்னையைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரையில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும். தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், புத்தாக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளன," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிதிநுட்பத் திட்டங்களை மதி நுட்பத்துடன் ஈர்க்க அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிதிநுட்ப நகரங்களின் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்றுவதே அரசின் இலக்கு என்றார் முதல்வர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் முத்திரைத் திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, பருவமழை போன்ற இடர்ப்பாடுகள் வருவதற்கு முன்பு, இலக்கு நிர்ணயித்த காலத்தில் திட்டங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.