செங்கல்பட்டு: ஜி20 மகளிர் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வாழை இலை விருந்து படைக்கப்பட்டது.
இந்த விருந்துபசரிப்பும் உணவு வகைகளும் தங்களை வெகுவாகக் கவர்ந்தது என அதில் பங்கேற்ற பெண் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 உச்ச மாநாடு இரு தினங்கள் நடைபெற்றது. இதில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 150 பேர் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் மாநாடு நிறைவடைந்ததை அடுத்து அதில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு முழுக்க முழுக்க தமிழ் கலாசாரத்தைப் பின்பற்றி சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பந்தி அமைத்து, வாழை இலை போட்டு சாம்பார், பொரியல், அப்பளம், பாயாசம் என சுவையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அவற்றைப் பரிமாறியவர்களும் வேட்டி, சட்டை அணிந்திருந்தனர்.
திருமண நிகழ்வுபோல் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் விருப்பத்தைக் கேட்டறிந்து உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இதனால் அவர்கள் மிகவும் உற்சாகம் அடைந்ததாகவும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.