சென்னை: மாணவர்கள் தலைவர்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றவர்களிடம் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை, சிறப்புப் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார் நடிகர் விஜய். இதற்காக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இதுபோன்ற நிகழ்ச்சியில் தாம் பேசுவது இதுவே முதன்முறை என்றார். தன் மனதில் பெரும் பொறுப்புணர்ச்சி வந்ததுபோல் உணர்வதாகக் குறிப்பிட்ட அவர், வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
"இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு முக்கிய காரணம் அண்மையில் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம். 'காடு இருந்தால் எடுத்துக்கொள்வார்கள். பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால் படிப்பை மட்டும் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது' என்ற அந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல, இன்றைய யதார்த்த நிலையும் இதுதான்," என்றார் விஜய்.
தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கக் கூடாது என்று அறிவுறுத்திய அவர், இதுகுறித்து மாணவர்களுக்குப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். மாணவர்கள் சுய அடையாளத்தை விட்டுவிடக் கூடாது என்றும் நம் கையை வைத்து நம் கண்ணையே குத்து வதுதான் நடக்கிறது என்றும் விஜய் தெரிவித்தாரர்.

