பெண் வயிற்றில் இருந்து 36 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது
கோவை: வயிற்றில் வளர்ந்த 36 கிலோ எடையுள்ள ராட்சத புற்றுநோய்க் கட்டியை கோவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். நீலகிரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான தமிழ்ச்செல்வி கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பரிசோதித்த போது அவருக்கு கருப்பையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு அந்தக் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. சுமார் 4.30 மணி நேரம் நீடித்த சிகிச்சையின்போது 36 கிலோ எடை கொண்ட புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. இத்தனை பெரிய கட்டி அகற்றப்படுவது இந்தியாவில் இது இரண்டாவது முறை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவிரி தண்ணீர்: தமிழகம் வலியுறுத்து
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ளபடி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்றும் அதன்படி இம்மாதம் 9.19 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும் தமிழகம் சுட்டிக்காட்டி உள்ளது. "இம்மாதம் 14ஆம் தேதி வரை
1.65 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 200 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது," என தமிழகம் மேலும் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கான ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்
சென்னை: இனி சென்னையில் இருந்து தென் மாவட்டங்க ளுக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு ஏற்ப ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ள தாக ரயில்வே நிர்வாகம் கூறியது. மேலும் தென் மாவட்டங்களுக்கான பயண நேரம் 45 முதல் ஒருமணி நேரம் வரை குறையும் என்றும் இது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் புதிய கால அட்டவணை யில் இடம்பெறும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரி வித்தனர். இதற்கு தென் மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சாலை வசதி: ராமதாஸ் வலியுறுத்து
சென்னை: அனைத்து மலைக் கிராமங்களிலும் போதுமான சாலைகளை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வேலூர் அரசு மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். "சாந்தியின் உடலை ஊருக்குக் கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி, தோள்களில் தூக்கிச் சென்றுள்ள னர். இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், மலைக் கிராமங்களுக்கு சாலை வசதிகூட செய்து தரப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இது மாநிலத்துக்கு அவமானம்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

