அரியலூர்: தேசிய திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவியை தனது சொந்தச் செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற பள்ளித் தலைமை ஆசிரியைக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
அரியலூர் மாவட்டம், வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் அமுதா.
அண்மையில் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெறும் மாணவிகளை தன் சொந்தச் செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக அறிவித்ததை அடுத்து, அவரது பள்ளி மாணவிகள் எட்டு பேர் தேர்வில் பங்கேற்றனர்.
அவர்களில் எட்டாம் வகுப்பைச் சேர்ந்த மிருணாளினி என்ற மாணவி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து தாம் அளித்த வாக்குறுதியின்படி சிறுமி மிருணாளினியை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் தலைமை ஆசிரியை அமுதா.
சென்னையில் மாணவி மிருணாளினிக்கு சில இடங்களைச் சுற்றிக்காண்பித்துவிட்டு, மீண்டும் ரயிலில் அரியலூருக்கு அழைத்து வந்தார் அமுதா.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தலைமை ஆசிரியைக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.