ராமநாதபுரம்: விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிக்கும் விழாவின்போது அமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சமயம் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்ற மாவட்ட ஆட்சியர் மேடை யிலிருந்து தள்ளிவிடப்பட்டார்.
ராமநாதபுரத்தில் அண்மையில் முதல்வர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் வந்தவுடன் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.
இதனால் சற்று தாமதமாக வந்து சேர்ந்த ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி கடும் அதிருப்தி அடைந்தார். அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
தாம் வருவதற்குள் விழாவை அவசரமாகத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்று அவர் ஆட்சியரிடம் கேள்வி எழுப்ப, அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்தார்.
இதையடுத்து அமைச்சருக்கும் எம்பிக்கும் இடையே விழா மேடையிலேயே வாக்குவாதம் மூண்டது. இதனால் இருவரின் ஆதரவாளர்களும் மேடையில் ஏறிவிட்டனர்.
மோதல் பெரிதாவதைத் தடுக்க, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அவரை மேடையில் இருந்த ஒருவர் தள்ளிவிட்டார்.
ஆட்சியர் கீழே விழுந்ததால் பரபரப்பு கூடியது. எனினும் அவர் சுதாரித்துக்கொண்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தினார்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக அவர் அரசு தலைமைச் செயலரிடம் புகார் அளித்ததாகத் தெரிகிறது. இம்மோதல் தொடர்பான படங்களும் காணொளிகளும் சமூக பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

