ராமநாதபுரத்தில் மோடி போட்டி என உலவும் தகவலால் பாஜக உற்சாகம்
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தமிழகத்துக்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வேண்டும் என பாஜக விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த அடிப்படையில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் ஒருவர்தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும், தமிழக பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர்: பத்திரப்பதிவின்போது லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை
மதுரை: பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழக்கமான நடைமுறைகளை மேற்கொள்ள லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கைகள் பாயும் என அத்துறையின் அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சீராய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், பத்திரப்பதிவுக்கான தொகையை இணையம் வழி செலுத்தலாம் என்பதால் பொதுமக்கள் கையில் பணம் கொண்டுவரத் தேவை இல்லை என்றார். "பத்திரப்பதிவின்போது யாராவது லஞ்சம் கேட்டால், இதுகுறித்த புகார்களை பதிவுத்துறை தலைவருக்கு அல்லது பதிவுத்துறை செயலாளருக்கு அனுப்பலாம். லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அமைச்சர் மூர்த்தி.
அனைவரையும் சாம்பியன் ஆக்குகிறார்: மகனைப் பாராட்டிய முதல்வர்
சென்னை: அனைத்துலக விளையாட்டுகள், போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற இடமாக தமிழகம் உருவெடுத்துள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் சாம்பியன்களாக மாற்றி வருவதாக அவர் பாராட்டி உள்ளார். சென்னையில் நடைபெற்ற அனைத்துலக ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்ற
அவர், முதல் இடம் வென்ற எகிப்து அணிக்கு தங்க கிண்ணத்தையும் இரண்டாம் இடம் வென்ற மலேசியா அணிக்கு வெள்ளி கிண்ணத்தையும் பரிசளித்தார்.
இப்போட்டியில் இந்தியாவும் ஜப்பானும் மூன்றாம் இடத்தைப் பெற்றன. அப்போது பேசிய அவர், இதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இந்த உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டி உலகின் கவனத்தை ஈர்த்தது
என்றும் அடுத்து 'கேலோ இந்தியா 2023' போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.
சீமான்: விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்குப் பாதிப்பு இல்லை
தென்காசி: விஜய் அரசியலுக்கு வந்தால் நாம் தமிழர் கட்சிக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவரை பிரதமர்
வேட்பாளராக அறிவித்தால் பாஜகவை ஆதரிக்கத்
தயார் என்று செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். "கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். எனக்கும் விஜய்க்கும் இடையே அண்ணன், தம்பி என்ற பந்தம்தான் உள்ளது. நான் பேசுவதைதான் தம்பி விஜய் பேசியிருக்கிறார். அது எனக்குத்தான் வலிமை சேர்க்கும். எங்களுக்கான வாக்குகளை விஜய்யால் பிரிக்க
முடியாது," என்றார் சீமான்.

