சென்னை: பொது மக்களிடம் இருந்து ஐநூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மோசடி செய்த தம்பதியர் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட 'ஹிஜாவு' என்ற நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது.
மொத்தம் ரூ.4,400 கோடி அளவுக்கு பணம் வசூலித்த அந்நிறுவனம் திடீரென மூடப்பட்டது. காவல்துறை மேற்கொண்ட விசாரணையின் முடிவில் 14 பேர் கைதாகினர்.
அவர்களிடம் இருந்து ரூ.14.47 கோடி ரொக்கப்பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ரூ.75 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.90 கோடி மதிப்புள்ள 54 அசையும் சொத்துகள் ஆகியவற்றையும் கண்டறிந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நிதி நிறுவனத்தின் இயக்குநர் உள்ளிட்ட 15 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சுஜாதா காந்தாவும் அவரது கணவர் கோவிந்தராஜூலுவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் ரூ.500 கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக வழக்குப் பதிவாகி உள்ளது.
அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

