பெரம்பலூர்: நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவி கோகிலா (படம்) மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடின உழைப்பால் நீட் தேர்வில் 161 மதிப்பெண்களைப் பெற முடிந்தது என்றும் வாய்ப்பு கிடைத்தால் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவச் சேவையாற்றப் போவதாகவும் அவர் கூறினார்.
பெரம்பலூர் மாவட்டம், காரை கிராமத்தில் வசிக்கிறது கோகிலாவின் குடும்பம். தந்தை சுப்பிரமணியன் பாசி மணிகள் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
"என்னைப் படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைக்கிறார் அப்பா. எனவே படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தேன்," என்கிறார் கோகிலா. நீட் தேர்வில் பழங்குடியின மாணவிகள் தேர்ச்சிக்கு 109 மதிப்பெண்கள் போதுமானது என்ற நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

