ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

2 mins read
c238d3cd-d888-40c5-9475-7c2af3fb3422
சென்னையில் வெள்ளமெனப் பாய்ந்தோடும் மழைநீரில் சிரமப்படும் வாகனமோட்டிகள். - படம்: இபிஏ

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடியப் பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை மாலை அறிவித்தது.

இவற்றுள் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக நடப்பு ஜூன் மாதத்தில், சராசரிக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் சுமார் 80 விழுக்காடு அளவுக்கு நிரம்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு தற்போது பெய்துள்ள அடைமழை மகிழ்ச்சி அளித்துள்ளது. மாநகர் முழுவதும் குளிர்ச்சி நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்வதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக, மீனம்பாக்கம் பகுதியில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

சென்னையில் இரு நாள்களாக நீடித்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றும் தண்ணீர் வடிகாலுக்கு உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்