ஆதிச்சநல்லூர் அகழாய்வு: முதுமக்கள் தாழியில் குழந்தைகளுக்கான வெண்கல வளையல்கள்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு: முதுமக்கள் தாழியில் குழந்தைகளுக்கான வெண்கல வளையல்கள்

2 mins read
54d57151-54e2-4c7d-aeb3-d4b5e1f0c97e
அகழ்வாராய்ச்சி பணியின்போது - படம்: ஊடகம்

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு நடவடிக்கையின்போது குழந்தையின் முதுமக்கள் தாழி கண்ெடடுக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு மேலும் பல அரிய தொல்லியல் பொருள்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழடி அகழ்வாராய்ச்சியின்போது தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நூற்றுக்கணக்கான தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பகுதியிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு முதல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில், அங்கு அண்மையில் கண்டெடுக்கப்பட்ட சிறிய அளவிலான முதுமக்கள் தாழி ஒன்று திறக்கப்பட்டது என்றும் அதில் நான்கு வெண்கல வளையல்கள் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

“மேலும், மிகச்சிறிய மண்டை ஓட்டின் எலும்பு, கை எலும்பு ஆகியவையும் கிடைத்தன. இந்த வளையல்கள் அவற்றை அணிபவரின் அளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வடிவில் உள்ளன.

“நான்கு வளையல்களுமே உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த வெண்கல வளையல்கள். அவற்றின் அடிப்படை அளவைக்கொண்டு பார்க்கும்போது ஐந்து முதல் எட்டு வயதுள்ள குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடும்,” என்றும் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் மேலும் கூறினர்.

மேலும் ஒரு முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தவிர, நான்கு ஈமப்பானைகள், இரும்பாலான குறுவாள், இரண்டு காப்பு வடிவிலான வளையல்கள் ஆகியவையும் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் சிறப்பு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் இதுபோன்ற அகழ்வாராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.