கட்சி தொடங்கும் முன்பே விஜய்க்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ், பாஜக

1 mins read
2ced5448-894d-4aaa-8923-e6fe429a1daa
விஜய் - படம்: ஊடகம்

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் பட்சத்தில் அவருடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசியக் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இவ்வாறு அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கூட்டணியில் இணைய விஜய் விரும்பினால், சேர்த்துக்கொள்ள தயார் என்றார்.

எனினும் கட்சித் தலைமைதான் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எம்பி விஜய் வசந்துக்கு இல்லை என்றாலும், அவர் மூலம் இத்தகைய அழைப்பை விடுத்து, நடிகர் விஜய் தரப்பின் பதிலை பெற காங்கிரஸ் திட்டமிடுவதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஊழலை எதிர்க்க வேண்டும் என்று கூறும் எந்த கட்சியையும் பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தயார் என்றார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் பட்சத்தில் அவருக்கும் இந்த விதிமுறையும் நடைமுறையும் பொருந்தும் என்றார் அண்ணாமலை.

விஜய் தமது அரசியல் பிரவேசம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூரவ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதற்குள் இரு தேசிய கட்சிகளும் அவருடனான கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்