சென்னை: கடந்த இரு நாள்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
எனினும் சாலைகளில் தேங்கி நின்ற மழை நீரை உடனுக்குடன் வெளியேற்ற மாநகராட்சி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கனமழை காரணமாக சென்னையில் விமானச் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
பொதுவாக ஜூன் மாதத்தில் சென்னை, அதன் அண்டை மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும். இந்நிலையில் நடப்பாண்டு எதிர்பாராத வகையில் கடந்த இரு நாள்களாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் புறநகர்ப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை வராது என்ற எண்ணத்தில் பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டுள்ளன. எனினும் அந்தப் பணிகள் முடிவடையும் முன்பே மழை கொட்டித் தீர்த்ததால் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.
ஓரிரு இடங்களில் பலத்த காற்று, மழை காரணமாக ஓரிரு மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றக்கோரி சென்னை, மணப்பாக்கம் பகுதி மக்கள் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் காலை ஆறு மணி முதல் மழை நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்ததால் வாகனமோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். ஜிஎஸ்டி சாலை, தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதனிடையே, தென்மேற்குப் பருவ மழையை எதிர்கொள்ள காவல்துறை தயாராக உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக பேரிடர் மீட்டுப் படை வீரர்கள் ஐநூறு பேர் தயார் நிலையில் உள்ளதாக திங்கட்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் இரண்டு குழுக்களும் நீலகிரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் மூன்று குழுக்களும் தயார் நிலையில் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், ஐநூறு பேரும் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

