சென்னை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சல் பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
பொதுவாக மழைக்காலங்களில் தமிழகத்தில் டெங்கி பாதிப்பு அதிகமாக இருக்கும். தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதை அடுத்து சுகாதாரத்துறை காய்ச்சல் பரவலைத் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
“தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெங்கி காய்ச்சல் பரவலாக கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்றும் போதிய அளவு மருந்துகளைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெறும் காய்ச்சல் என்றாலும் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்குச் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும் என பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மிக விரைவில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புது வகையான காய்ச்சல் பரவுகிறது எனில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றும் உரிய மருத்துவ ஆலோசனை பெற தயங்க வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே சில மாவட்டங்களில் காய்ச்சல் அறிகுறிகள் வித்தியாசமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


