சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரின் பேரில் பாஜக ஆதரவாளர் உமா கார்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வந்ததாக கோவை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
56 வயதான உமா கார்கி, பாஜகவுக்கு எதிரான கட்சிகள் தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து மிகவும் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக கோவை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் கோவை காவல்துறையில் புகார் அளித்தார்.
“உமா கார்கியின் கருத்துகள் பல்வேறு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஹரீஷ தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில்தான் பாஜக சார்பில் உமா கார்கிக்கு சமூக ஊடக செயல்பாட்டாளருக்கான விருது உமா கார்கிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழங்கி உமா கார்கியை கௌரவித்தார். விருது பெற்ற மறுநாளிலேயே உமா கார்கி, கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் உள்ள உமா கார்கியை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனுத்தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, கைதான உமா கார்கியை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி அதிகாரிகள் உமா கார்கியை வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரித்தனர்.

