சென்னை: மத்திய அரசு நிர்வாக நேர்மையின்றி நடந்துகொள்வதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக அரசின் நீட் தேர்வு மசோதா தொடர்பாக அதிபர் அனுப்பிய கடிதத்தைக் காணவில்லை என உள்துறை அமைச்சு தெரிவித்திருப்பதை ஏற்க இயலாது என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நீட் மசோதா தொடர்பாக, அதிபர் மாளிகை அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை என உள்துறை அமைச்சு சொல்கிறது. காணாமல் போவது கடிதமல்ல, நிர்வாக நேர்மை,” என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அதிபருக்குத் தாம் கடிதம் எழுதியதாகவும் அதில் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படாமல் தாமதம் ஆவதை குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான தமிழக மாணவர்களும் பெற்றோரும் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதை தாம் சுட்டிக்காட்டி இருந்ததாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அதிபர் அலுவலகத்தில் இருந்து தமக்குப் பதில் வந்ததாகவும் அதில் தமது கடிதத்தை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சுக்கு அனுப்பி உள்ளதாக அதிபர் மாளிகை குறிப்பிட்டிருந்தது என்றும் சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டி உள்ளார்.
“ஆனால் அதிபர் அனுப்பிய கடிதம் வரவே இல்லை என உள்துறை அமைச்சு சொல்கிறது. நாட்டின் நிர்வாகத் தலைமையகமான அதிபர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம் கிடைக்கவில்லை என உள்துறை அமைச்சு தெரிவித்திருப்பதன் மூலம் தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்சினையில் மத்திய அரசின் நிர்வாகம் எவ்வளவு அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கிறது என்பது தெரிய வருகிறது,” என சு.வெங்கடேசன் எம்பி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

