சென்னை: இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக உள்ளது என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
சுமார் ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழு கூறியது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் உயர் நீதிமன்றம் முடிவு எடுத்ததாக கருதுகிறோம் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தற்போதைய நிலையில், உயர் நீதிமன்றம் விசாரணையை தொடர்வது தான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உ த்தரவிட்டது.

